Saturday, February 12, 2011

பொற்கோ அவர்களின் ‘இலக்கிய அறிவியல்’

பொற்கோ அவர்களின் ‘இலக்கிய அறிவியல்’
--ஒரு மதிப்பீடு
மறைமலை இலக்குவனார்

முதிர்ந்த சிந்தனைப்போக்குடனும் தெளிந்த ஆய்வுநோக்குடனும் நடுநிலைவாய்ந்த அணுகுமுறையுடனும் ஆய்வு செய்யும் இயல்புமிக்க அறிஞர் பொற்கோ அவர்கள் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் வழங்கியுள்ள அறிவுக்கருவூலம் என்னும் வகையில் “இலக்கிய அறிவியல்” என்னும் நூலைக் குறிப்பிடலாம்.1998-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றுள்ள இந்நூல் இந்தப் பன்னிரு ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.நல்ல நூல்களை நாடிப் படிக்கும் வழக்கமும் படித்தவற்றை அறிவுசால் தோழமையுடன் விவாதிக்கும் பழக்கமும் இன்றைய தமிழ்நாட்டில் தேடக் கிடைக்காத தங்கங்களாக அருகிவிட்ட காரணத்தால் இத்தகையதொரு தாக்கத்தை நம்மால் காண இயலவில்லை,
இந் நூல் ஒரு செயல்விளக்கக் கையேடு போன்று திறனாய்வாளர்களாலும் பேராசிரியர்களாலும் பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை.
தமிழிலக்கிய நெறி, தமிழிலக்கியவழி இலக்கியக் கோட்பாடுகள்,தமிழிலக்கியவழி இலக்கிய அறிவியல் என மூன்று இயல்களாக இந் நூலை ஆசிரியர் பகுத்துள்ளார்.

‘தமிழிலக்கிய நெறி’ என்னும் முதல் இயலில் தமிழிலக்கிய வரலாற்றில் மூன்று பெருநெறிகள் எனப் புலவர் நெறி,சித்தர் நெறி,மக்கள் நெறி ஆகிய மூன்றனை ஆசிரியர் விளக்குகிறார்.மரபு காக்கும் மாண்புடைய கற்றறிந்த புலவர்கள்,தமக்கு முந்தைய நெறியையும் இலக்கியங்களையும் மதித்து,சமகாலச் சமுதாயத்தேவைக்கேற்ப இலக்கியங்கள் ஆக்கும் போக்கினைப் ‘புலவர் நெறி’ எனக் குறிப்பிடுகிறார்.சிலப்பதிகாரம்,மணிமேகலை,திருக்குறள்,நாலடியார்,பத்தி இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள் ஆகியவற்றைப் புலவர் நெறியில் அமைந்த இலக்கியங்களுக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
யோகநெறிமுறைகள்,வாழ்க்கைத் தத்துவங்கள்மருத்துவமுறைகள் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டமைந்த சித்தர் இலக்கியங்கள் சித்தர்நெறி என்னும் இலக்கியநெறிக்கு எடுத்துக்காட்டாவன.எளிய சொற்களைக் கொண்டமைந்தாலும் இவை எளிதில் விளங்கிக்கொள்ள இயலாக் குறியீட்டுச் சொற்களைக் கையாள்வதால் மக்கள் வாசிப்புக்கு உட்படாமல் எட்டிநிற்கின்றன.இவை வழிபாட்டுநெறியைக் கூறியபோதும் சமயச்சடங்குகளைப் புறந்தள்ளும் அறிவியக்க முழக்கங்களாக அமைந்துள.

மூன்றாவதாக ‘மக்கள் நெறி’ என்னும் இலக்கிய நெறியைக் குறிப்பிடுகிறார்.வைப்புமுறையில் இதனை மூன்றாவதாக வைத்தாலும் ஏனையவற்றைக் காட்டிலும் இதுவே சிறப்பு வாய்ந்த ஒன்று எனச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
ஏட்டிலக்கியத்திற்கு முன்னரேயே தோன்றிவிட்ட வாய்மொழி இலக்கியங்களாகிய கதைப் பாடல்கள்,புதிர்க்கதைகள்,விடுகதைகள்,பழமொழிகள் ஆகியவை தோன்றுதற்குக் காரணமாய் இந்த இலக்கியநெறி அமைந்துள்ளதுமக்கள் வாழ்வையே கருவாகவும் நுவல்பொருளாகவும் கொண்டு இயற்றப்பட்டு,மக்களாலேயே நாள்;தோறும் பயன்படுத்தப்பட்டுவரும் பெருமை இவ்வகை இலக்க்கியங்களுக்குரிய தனிச்சிறப்பு என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.ஏற்றப் பாடல்கள்,நடவுப்பாடல்கள்,தாலாட்டுப் பாடல்கள்,போன்றவை நாட்டுப்புற வாழ்க்கைமுறையின் ஓர் அங்கமாகத் திகழ்வதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.கும்மி,கோலாட்டம் ஆகியவை குறித்த பாடல்கள் நாட்டுப்புறக்கலைகளுக்கு இயங்காற்றலை வழங்கிவருவதையும் கூறுகிறார்.
இம் மூன்று நெறிகளுமே இலக்கியங்கள் தோற்றமுறுதற்குக் காரணமாக அமைந்துள்ளனவெனினும் நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களுள் பெரும்பான்மையன
புலவர் நெறியில் படைக்கப்பட்டனவென்பதால் அதனை மட்டும் விளக்கமாகக் கூறுகிறார்.
இயற்கை வழிபாட்டையும் வீரர் வழிபாட்டையும் முன்னோர் வழிபாட்டையும் போற்றிய பழந்தமிழகத்தில் இன்பம்,அமைதி,புகழ் ஆகிய மூன்றுமே தலையாய குறிக்கோள்களாகப் புலவர்களால் அடையாளம் காட்டப்பட்டன.குறிக்கோள் வழி மனிதவாழ்வை இயக்கும் இந்நெறியையே இயற்கைநெறி என ஆசிரியர் குறிக்கிறார்.
இன்பம் விழையும் மனிதனை நெறிப்படுத்தும் ஆற்றல்மிக்க அன்பின் ஐந்திணைநெறி காட்டும் அக இலக்கியங்கள்,அமைதியை வலியுறுத்தும் புறப்பாடல்கள்,புகழ்நிலைக்கும் செயல்களைத் தூண்டும் பாடல்கள் ஆகியவை சங்க இலக்கியங்களில் அமைந்துள்ளமையைச் சான்றாகக் காட்டுகிறார். சங்க இலக்கியங்கள் இயற்கைநெறியில் அமைந்தவை என்னும் ஆசிரியர் கருத்து நம் அனைவருக்கும் ஏற்புடையதென்பதுடன் நயமிக்க விளக்கமாக இக் கருத்து அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தவநெறி என்னும் வகைப்பாடும் அதற்குரிய விளக்கமும் போற்றி உளங்கொளத்தக்கன.
தனிமனித அமைதி நாடும் உள்ளத்திற்குத் தவநெறி சரியான வடிகாலாக விளங்குகிறது என வள்ளுவர்வழி நின்று ஆசிரியர் விளக்குகிறார்.பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யலலகாது,தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என வள்ளுவர் வழியிலே தவத்தை வரையறுப்பதும் போர்நெறிக்கு மாற்றாகத் தவநெறியை மொழிவதும் ஆசிரியரின் ஆய்வுநுணுக்கத்திற்குச் சான்றாவன.தவநெறி தலைப்பட்டபின் புகழ்நாட்டம்,இன்பவேட்கை ஆகியவை மங்கத் தொடங்கிவிட்டன எனவும் குறிக்கோள் திசை மாறியது எனவும் நுவலும் ஆசிரியர் விதிக்கோட்பாடு வலுப்பெற்று பத்திநெறி புதுச்செல்வாக்கு பெறத் தொடங்கியது எனவும் அறுதியிடுகிறார்.ஒரு சில தொடர்களால் ஒரு நூற்றாண்டுப் போக்கை விளக்கும் ஆசிரியரின் மதிநுட்பம் வணங்கத்தக்கது.நீதி இலக்கியங்கள் அனைத்தும் இத் தவநெறியின் அடிப்படையிலேயே அமைந்தவை என்னும் ஆசிரியரின் கூற்றுக்கு மாற்றுக் கருத்து இருக்கவியலாது.

இறைவனுக்கு முதன்மையளித்து இறையருளைப் பெற எதனையும் இழக்க ஆயத்தமாகும் மனப்பக்குவத்தைத் தூண்டுவனவாக பத்தி நெறி இலக்கியங்கள் எழுந்தன.தவநெறி முகிழ்த்தபோது புத்தமும் சமணமும் தவநெறியின் மேலாண்மைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன.விதியை வெல்லமுடியாது என மனிதன் சோர்ந்தபோது இறையருளால் விதியையும் வெல்லலாம் என்னும் நம்பிக்கையை வழங்குவனவாகப் பத்திநெறியிலக்கியங்கள் அமைந்தன.அன்றைய அரசியல் சமுதாயச்சூழலில் சைவ வைணவ இலக்கியங்கள் மனிதனின் கவலையைப் போக்கும் மாமருந்தாக்த் திகழ்ந்தன.
தவநெறி, பத்திநெறிக்கு வித்தாக அமைந்தது போன்று பத்திநெறி, வைதீகநெறி வளர்ந்தோங்க வழிவகுத்ததென ஆசிரியர் விளக்குகிறார்.
எப்படியோ தென்னகத்தில் வந்துபுகுந்த வைதீகநெறி வடமொழி மேலாதிக்கத்திற்கும் வருணாசிரமதர்ம மேலாதிக்கத்திற்கும் வழிவகுத்துத் தமிழினத்தைச் சாதிவலியில் கட்டித் தமிழ்மொழியை வடமொழிக்கு அடிமையாக மாற்றியது.மொழியும் இனமும் நிலைகுலைந்திடவே அரசுகளும் சரிந்துபோயின.இதன்விளைவாகக் கிளர்ச்சிநெறி தலைதூக்கியது.
வழிபாட்டிலும் கல்வெட்டுகளிலும் ஆதிக்கம் செலுத்திய வடமொழியை எதிர்த்துச் சைவமடங்கள் தோன்றலாயின.வைணவர்களும் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தத்தைத் திராவிடவேதம் எனப் போற்றி வடமொழிக்கு அடிபணியமறுத்தனர்.மக்கள் மடங்கள்,கோயில்கள் ஆகியவை சார்ந்து தமது எதிர்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தத் தலைப்பட்டனர்.பிறமொழியினர்,பிறநாட்டினர் படையெடுப்புகளால் வருந்திய காலக்கட்டங்களில் இவையே ஆறுதலளித்தன.நாட்டு விடுதலைக்காகவும் கிளர்ச்சி தலைதூக்கியது.

அயல்நாட்டினரின் ஆட்சியை எதிர்க்கும் கிளர்ச்சிப்போக்கும் வைதீகநெறியின் வல்லாண்மையை எதிர்க்கும் கிளர்ச்சிப்போக்கும் புதிய இலக்கியங்கள் தழைக்கவழிவகுத்தன.நாட்டுவழித் தன்மானம்,மொழிவழித்தன்மானம்,இனவழித்தன்மானம் ஆகியவை நுவல்பொருளாகக் கொண்டு இலக்கியங்கள் பல்கிப்பெருகின.

விடுதலை பெற்ற சூழலில் அவ் விடுதலையைப் பயன்படுத்தி முன்னேற வழியறியாது அளவிறந்த தனிமனிதவாதத்தில் ஈடுபடும் இலக்கியங்களும் படைக்கப்பெற்றன. குழுமனப்பான்மையையும் தனிமனித மனக்கோணல்களை எடுத்தியம்புவதனைப் புதுமைநெறியாகக் காட்டும் இலக்கியங்களும் குழு மனப்பான்மையில் ஈடுபடுத்தும் இலக்கியங்களும் உருவாகின. இச்சூழலைக் கிளர்ச்சிநிலையின் வளர்ச்சி, தனிமனிதவாதநெறி என்னும் துணைப்பிரிவுகளில் ஆசிரியர் விளக்குகிறார்.இத்தகைய தவறான போக்குகளைக் களையும் மாமருந்தாக, உலகஒருமைப்பாட்டையும் உயிரின ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி அனைவரையும் ஒன்றுபடுத்தும் பெருநெறி மலரவேண்டும் என்னும் ஆசிரியர், வள்ளுவர்,வள்ளலார் ஆகியோரை இப் பெருநெறியாளராகக் காட்டுகிறார்.

‘தமிழிலக்கியவழி இலக்கியக்கோட்பாடுகள்’ என்னும் இரண்டாம் இயலில் இலக்கிய அறிவியல்,தமிழிலக்கியக் கோட்பாடுகள் ஆகியவை நுண்ணிதின் ஆயப்படுகின்றன.
அறிவியல் என்றால் என்ன என விளக்கும் ஆசிரியர், இலக்கிய அறிவியல் என்றால் என்ன, இலக்கிய ஆய்வு அறிவியல் ஆகுமா என்னும் இரு இன்றியமையாத வினாக்களுக்கு விடை காண்கிறார்.ஆசிரியரின் தனித்தன்மையும் ஆய்வுநுட்பமும் இந்த விளக்கங்கள் மூலம் தெற்றெனப் புலப்படுகிறது.

“அறிவியல் என்பது முறையான ஆய்வினால் கிடைத்த நிறைவான அறிவுத் தொகுதி’ பக்.32)

“இலக்கியங்களைப் பற்றிய முறையான அறிவுத்தொகுதி கிடைக்கும் பொழுது அந்த அறிவு ஆராய்ச்சித் தொகுதியை இலக்கிய அறிவியல் என்று குறிப்பிடுவதற்கு எந்தத் தடையும் இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது” (பக்.32)

என்று அறுதியிட்டு உறுதிப்படத் தெரிவிக்கும்போது ஆசிரியர் திறனாய்வுத்துறையில் ஆழங்கால்பட்ட திறம் வெள்ளிடைமலையாகிறது.

பாட்டும் உரையும்,இலக்கியமும் பனுவலும் என்பவற்றைத் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டும் திறம் இனிது.செய்யுள்,நூல்,பொருள் ஆகியவற்றின் கட்டமைப்பு,இலக்கியத்தின் செயல்பாடு,இயல்பு ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளன இலக்கியங்கள் காலந்தோறும் தோன்றியதற்குரிய காரணங்களாக .இன்பம்,அமைதி,புகழ்,பத்தி ஆகிய கருத்தோட்டங்கள் அமைந்த விதத்தை ஆசிரியர் சிறப்புற விரித்துரைக்கிறார்.
‘சமுதாயக் கருத்தோட்டந்தான் இலக்கியத்தின் பாடுபொருளை முடிவு செய்கிறது’ என்னும் ஆசிரியரின் தொடர் ஒரு நூற்பா என அழைக்கத்தக்கது.
‘தமிழிலக்கியவழி இலக்கிய அறிவியல்’ என்னும் மூன்றாம் இயல் தமிழ்த்திறனாய்வுலகிற்கு ஆசிரியரின் கொடை எனக் கூறத்தக்கது.
பொதுநோக்க வகைப்பாடு, பொதுமைநோக்கில் விளம்புமுறை, பொதுமைநோக்கில் இலக்கிய உத்திகள்,இலக்கியம் தோன்றும் நிலைக்களங்கள்,உலகப்பொதுமையும் தனித்தன்மையும்,சமுதாயத்தொடர்பும் இலக்கிய மாற்றமும்,மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்,யாப்பு,மொழிநடை,உயிர்க்கருத்து,படைப்பபளன்,படைப்பு,வாசிப்பாளன்,
நிகழ்நிலைத்தொடர்பு,நிகழ்த்துகலைவாணர்கள்,மரபுமீறலும் மதிப்பு மாற்றமும், தனிமனிதவாதமும் தனிமனிதவக்கிர வாதமும், மேம்பாட்டுப்பெருநெறி என்னும் துணைப்பிரிவுகள் ஆசிரியரின் புலமைநலத்தை நாமும் பெறத் தூண்டுகோலாயமைவன.நிறைவாக, ‘செய்யவேண்டிய பணிகள் ஏராளம்’ என்னும் துணைப்பிரிவு அமைத்து நூலைப் படிக்கும் ஒவ்வொருவரையும் செயலாற்றத் தூண்டுகிறார்.
கவிதைப் படைப்பு, காப்பிய ஆக்கம், மொழிபெயர்ப்புத்திறம்,மொழியியலில் தனிப்பெரும்புலமை,ஆசிரியப்பணி,ஆட்சித்திறம் ஆகியவற்றில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மிளிரும் ஆசிரியர் திறனாய்வுத்துறையில் வித்தகராக விளங்குவதனைக் காட்டும் இந்நூல் தமிழ்த்திறனாய்வாளர்களில் தனிச் சிறப்பிடம் இவருக்கு அமைந்துள்ளமையை உலகுக்கு அறிவிக்கிறது.
புலமை மிடுக்கை வெளிப்படுத்தும் நோக்கமின்றி அனைவரையும் திறனாய்வின் துணைக்கொண்டு படைப்புக்கலையைச் செழுமைப்படுத்தும் பெருநோக்குடன் இந்நூல் அமைந்துள்ளது.
வள்ளுவர்,வள்ளலார் ஆகியோரின் பெருநெறியைப் பற்றிக்கொண்டு நம்மையும் உடனழைக்கும் பொற்கோ அவர்களுக்குத் தமிழுலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது எனல் மிகையன்று.